ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக இத்தனை நாள் சம்பளமா? இன்று அறிவிப்பு வெளியாகிறது
ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் குறித்த இனிப்பான தகவல் இன்றைக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிகப்பெரும் அரசுத் துறையாக ரயில்வே செயல்பட்டு வருகிறது. 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றும் இந்த துறையை நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே செயல்படுகிறது. இந்நிலையில் பண்டிகை தினங்களையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைக்குள் அதுகுறித்த தகவல் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தொகை போனஸாக அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தொடர்ந்து 12ஆவது ஆண்டாக போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் 8 ஆண்டுகளாக தொடர்ந்து 78 நாட்கள் ஊதியத்தொகையை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக போனஸ் குறித்த அறிப்பு வெளியாகவுள்ளது.
இருப்பினும் இந்த அறிவிப்பு ரெயில்வே போலீசார், ரெயில்வே சிறப்பு அதிரடிப் படையினருக்கு பொருந்தாது. போனஸ் அளிப்பதன் மூலம் ரூ. 1984.73 கோடி கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.