வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. இந்த சூழலில் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 25-ந் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த தகவலை தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஏவுகணை சோதனை எங்கு நடத்தப்பட்டது, எந்த வகை ஏவுகணை சோதிக்கப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று (வியாழக்கிழமை) தென்கொரியாவுக்கு செல்ல இருக்கும் நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.