மக்களின் பேராதரவுடன் கிழக்கில் தொடரும் PTA இற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி, மத்திய முகாம் 3 இல் அமைந்துள்ள ஆலய முன்றலில் மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், தவராசா கலையரசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.