ரேஷன் பொருட்கள் இலவசம் திட்டம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா கோரதாண்டவம் ஆடியதை அடுத்து லாக்டவுன் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் வேலை மற்றும் உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவும் விதமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசால் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழில் இத்திட்டம் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் வழக்கமாக வழங்கப்படும் உணவு தானியங்களை விட கூடுதலாக ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் சாதாரண ரேஷன் அளவைவிட கிட்டத்தட்ட இருமடங்காக வழங்கப்படுகிறது.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகும் கூட, 2020ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது கட்டமாக ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக மார்ச் 26-ல் மேலும் 6 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடர மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த திட்டத்தை இன்னும் 6 மாதங்களுக்குத் தொடர சுமார் 80,000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் இதுவரை 5 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 6வது முறையாக செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை இந்த திட்டத்திற்காக 3.45 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 மாதத்திற்கு திட்டத்தை நீட்டித்துள்ளதால் மத்திய அரசுக்கு 44,762 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு 122 லட்சம் டன் மதிப்புள்ள உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலமாக இதுவரை இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட உணவு தானியங்களின் மதிப்பு 1,121 லட்சம் டன்களை எட்ட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் ரேஷன் கடைகளில் இருந்து ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தின் கீழ் எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் அல்லது பயனாளிகளும் பெயர்வுத்திறன் மூலம் இலவச ரேஷன் திட்டத்தின் பலன்களை பெறலாம். இதுவரை, 61 கோடிக்கும் அதிகமான இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் இத்திட்டம் மூலம் பலனடைந்ததாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் உணவு தானிய கையிருப்பு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.