சவுக்கு சங்கரை சிறையில் சந்திக்க பார்வையாளர்களுக்கு தடை…
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை சிறையில் சந்திப்பதற்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூட்யூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், “உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது” என கூறியிருந்தார்.அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்ற விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் செப்டம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு விசாரணையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக அவர் கடந்த 16ஆம் தேதி கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவரை சந்திப்பதற்கு பார்வையாளர்களுக்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது. சிறையில் அவரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பார்வையாளர்கள் சந்திக்க சிறைத்துறை அனுமதி அளித்து இருந்தது. சிறையில் அடைக்கப்பட்டது முதல் 2 செவ்வாய், 2 வியாழக்கிழமை என 4 நாட்களில் 25 பார்வையாளர்கள் வந்து அவரை சந்தித்தனர்.
இதனால் அசெகரியமான சூழல் ஏற்படுவதாக கூறி இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க தடை விதித்து கடலூர் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.