தேவர் குருபூஜை – தங்க கவசத்தை பெறப்போவது யார் ? ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே போட்டி
முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜைக்கு அவரின் சிலைக்கான தங்க கவசத்தை பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் அதிமுகவின் பொருளாளர் தங்கக்கவசத்தை பெறும் வழக்கம் இருக்கும் நிலையில், தற்போது ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஆகியோருக்கிடையே நிலவும் பிரச்னையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள். தென் மாவட்டங்களில் அதிகளவில் இருக்கும் தேவர் சமுதாய மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கீரிடம் மற்றும் கவசத்தை வழங்கினார்.
சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசம் மதுரை பேங்க் ஆப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் தேவர் ஜெயந்தி நிகழ்வு வரும்போது அதிமுகவின் பொருளாளராக இருப்பவர் வங்கியிலிருந்து கவசத்தை எடுத்து கமுதியில் உள்ள தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கி, நிகழ்வு முடிந்த பின்னர் மீண்டும் வங்கியில் வைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த முறை அதிமுக பொருளாளர் என்ற அடிப்படையில் தேவர் தங்க கவசத்தை பெறப்போவது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது .
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் பொதுச்செயலாளருக்கான உட்கட்சி தேர்தலை நடத்தி அதற்கு ஒப்புதலை பெறுவதற்காக பொதுக்குழுவையும் கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது.
பொதுக்குழு செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரே பொருளாளராக தொடர்கிறார். அதிமுகவில் இரு அணிகள் இருக்கும் நிலையில் வங்கியில் இருக்கும் தங்க கவசத்தை பெறப்போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு எழத்தொடங்கியுள்ளது.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதால் தங்களிடமே தேவரின் கவசத்தை வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். இதனை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் வங்கியிடம் மனு அளிக்க தயாராகி வருகிறது. இதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் பிரச்னை எழுந்தபோது மாவட்ட ஆட்சியர் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தங்க கவசத்தை பெற்று, நிகழ்வு முடிந்த பிறகு மீண்டும் வங்கியில் ஒப்படைத்தார். எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே பிரச்னை தொடரும் பட்சத்தில் அதே நிலை தான் இந்த ஆண்டும் தொடரவும் வாய்ப்பிருக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பது என்பது ஒரு நிகழ்வாக பார்க்காமல் அதிமுகவினர் கவுரவ பிரச்னையாக பார்க்க தொடங்கியுள்ளனர். எனவே அதிமுகவின் இரு தரப்புமே தங்க கவசத்தை பெற தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தேவர் குருபூஜைக்கு 27 ஆம் தேதி தான் தங்க கவசத்தை பெற வேண்டும் என்றாலும் தற்போதிலிருந்தே பிரச்னை உருவாக தொடங்கியுள்ளது. இரு தரப்பில் தேவரின் தங்க கவசத்தை பெறப்போவது யார் ? 2017 ஆம் ஆண்டை போலவே மாவட்ட நிர்வாகமே கவசத்தை பெறுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.