5 நாள் லீவு.. சொந்த ஊரு போக சிறப்பு பேருந்து – எங்கிருந்து புறப்படும் முழு விவரம்
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து இன்று முதல் 2000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படும் நிலை உள்ளதால், அரசு போக்குவரத்து கழகம், இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து இன்றும், நாளையும் தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பிற மாநகரங்களில் இருந்து 1,650 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இந்த கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் பண்டிகைக்குப் பிறகு பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்காகவும் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.