600 கிலோ வெடிபொருள்.. 6 வினாடிகள்.. தரைமட்டமாகும் சாந்தினி சௌக் பாலம்
புனேவில் அமைந்துள்ள மிகப் பழமையான சாந்தினி சௌக் பாலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு வெடிவைத்துத் தகர்க்கப்படவிருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த நிறுவனம், தில்லியில் ஏற்கனவே இரட்டைக் கட்டடங்களை தகர்த்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் நிறுவனம்தான், நாளை இந்தப் பாலத்தையும் தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஷ்முக் கூறுகையில், அதிகாலை 2 மணிக்கு ஒரு சில வினாடிகளில் பாலம் தரைமட்டமாக்கப்படும். பாலம் தரைமட்டமானதும் உடனடியாக இடிபாடுகள் அகற்றும் பணி தொடங்கிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்திருக்கும் மிக முக்கிய சந்திப்பு சாந்தினி சௌக் பகுதியாகும். இந்தப் பாலத்தைக் கடந்துதான் புனேவிலிருந்து செல்ல முடியும். இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் என்பது பரவலாகப் பேசப்படும் விஷயம்தான்.
இந்த நிலையில்தான், பழைய பாலத்தை இடித்துவிட்டு அங்கு புதிய அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதையடுத்து, பழைய பாலத்தில் 1300 துளைகள் இடப்பட்டு, அதில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன. அக்டோபர் 2ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், வெடிபொருள்கள் மூலம் பாலம் தகர்க்கப்படவிருக்கிறது.
இப்பகுதியில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்துத் தடை செய்யப்படுகிறது.