போதைப்பொருள் பாவனைக்கு அடிமையென மாணவர்களைக் கேவலப்படுத்துகின்றார்கள்!
“ஊடகங்களைப் பார்த்தால் வெட்கமாக இருக்கின்றது. எமது மாணவர் சமுதாயத்தைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எமது வடக்கு மாகாணம் போதைப்பொருளுக்கு அடிமையான கூட்டம் என்று பட்டம் சூட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அது ஒரு பகுதியாக போய்க்கொண்டிருக்கட்டும். அதனைப் பெரிதாக்கி போதைப்பொருளுக்கு அடிமையாக விட்டார்கள் என்றெல்லாம் பெரிய பட்டம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.”
– இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியின் பாடசாலை கட்டடத் தொகுதி திறப்பு விழா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது உரையில்,
“பல சிரமங்களுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் எமது வடக்கு மாகாணம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறும் வகையில் எங்கள் மாணவர்கள் திட்டமிட்டு கற்கவேண்டும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்க்கும்போது அதிகளவான மாணவர்கள் வர்த்தக மற்றும் கலைத்துறையைத்தான் தெரிவு செய்து அதில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றிருக்கின்றார்கள்.
அவர்களுடைய எதிர்காலம் சற்றுக் கேள்விக்குறியானதுதான். தொழில்நுட்பம் சார்ந்த கல்வியைத் தெரிவு செய்வதன் ஊடாக எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்கலாம்.
பட்டதாரியானால் வேலை கிடைக்கும் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். எந்தவொரு காலத்திலும் இனி பட்டதாரிக்கு வேலை கொடுப்பதற்கு அரசு தயாராக இல்லை. நீங்களாகத்தான் வேலைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.
பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் அண்மைக்காலமாக ஏன் இப்படி செய்தி போடுகின்றார்கள் என்று தெரியவில்லை. பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களைப் பார்ப்பதற்கே வெட்கமாக இருக்கின்றது.
வடக்கு மாகாணம் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டதாகக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் உண்மை இருக்கின்றது. ஆனால், தொடர்ச்சியாகக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழர்களையும் எங்களுடைய வடக்கு மாகாணத்தையும் எங்களுடைய பண்பாட்டையும் மிகக் கேவலமாக அவர்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையிலேயே எங்களுடைய மாணவர்களுக்கு நாங்கள் நல்ல விடயங்களைப் புகட்ட வேண்டும். எங்களுடைய பாடசாலை ஆசிரியர்கள் நேரமில்லாவிட்டாலும் அதற்கென ஒரு நேரம் எடுத்து நல்ல விடயங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
இரண்டு பாட வேளைகள் உள்ள ஆசிரியர்கள் ஒரு பாட வேளையாவது மாணவர்களுக்குப் போதைப்பொருள் பாவனை அல்லது பொது விடயங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் என்ன ஏற்படும் என்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
நாங்கள் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து முன்னெடுத்தால் மாணவர்களுக்கு அதில் ஆர்வம் வந்துவிடும். தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது போலும் அமைந்துவிடும். மாணவன் அதை அறிவதற்கு முற்படுவான். அவ்வாறான நிகழ்வை நாங்கள் மாணவர்களுக்குச் சொல்லக்கூடாது.
நாங்கள் தீமைகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தினால் என்ன நடக்கும், உயிருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பவற்றைச் சொல்லிக் கொடுங்கள்” என்றார்.