போதைப்பொருள் பாவனையை மறைத்தால் ஒழுக்காற்று நடவடிக்கை! – வடக்கு ஆளுநர் எச்சரிக்கை.
வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை மறைக்கும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள விவரங்கள் சேகரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலைக்கு அவப்பெயர் ஏற்படும் என வடக்கு பாடசாலைகளில் போதைப் பாவனையில் ஈடுபடும் மாணவர்களது தரவுகள் மறைக்கப்படுகின்றன எனக் கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய வடக்கு மாகாண ஆளுநர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு எழுத்து மூலமான அவசர அறிவுறுத்தல் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“மறு அறிவித்தல்வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள்களின் பயன்பாடு தொடர்பான விவரங்களை மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஆளுநரது செயலாளருக்கு இணைப்புச் செயலாளர் ஊடாக வழங்க வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளையும் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதோடு இரகசியத் தன்மை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை சிகிச்சைக்குட்படுத்தவும் அல்லது புனர்வாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
பாடசாலைகளில் போதைப்பொருள் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சினால் வெளிப்படுத்தப்படாத பட்சத்தில் பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டி நேரிடும்.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பளாருடன் இணைந்து சம்பவங்களை நிரல்படுத்தி இணைப்புச் செயலாளர் ஊடாக ஆளுநரின் செயலாளருக்குப் பிரதியுடன் ஆளுநருக்கு வழங்குவதற்கு சமர்ப்பிக்க முடியும்.
மேலும் வடக்கு சுகாதார அமைச்சானது சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் பாவனை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பாக அவதானிப்புக்களைச் செலுத்தி உறுதிசெய்து விவரங்களை ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உடன் இணைந்து பணியாற்றி ஆளுநருக்கு அட்டவணைப்படுத்த வேண்டும்.
இது தொடர்பில் கள நிலைவர அறிக்கையை ஆளுநர் செயலாளர் உரிய உத்தியோகத்தர்களை ஒன்றுகூட்டி ஒவ்வொரு 5 கிழமைக்கு ஒரு தடவை உரிய நடவடிக்கைக்கும் பரிசீலைனைக்குமாக அறிக்கை செய்தல் வேண்டும்” – என்றுள்ளது.