இணைய விளையாட்டால் வடமராட்சியில் 2 சிறுவர்கள் தற்கொலை!

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு சிறுவர்கள் இணைய விளையாட்டால் (வீடியோ கேம்) தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளனர் என்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடமராட்சி பிரதேசத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு சிறுவர்கள் இணைய விளையாட்டுக்கு அடிமையான நிலையில் உயிரிழந்துள்ளனர்.
15 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 15 வயதான சிறுவன் இணைய விளையாட்டில் (ஒன்லைன் கேம்) தனது நண்பர்களுடன் ஈடுபட்டுள்ளான். அந்தச் சிறுவன் தோல்வியடைந்த நிலையில், அவனது நண்பர்கள் குறுஞ்செய்தி வழியாகக் கேலி செய்ததை அடுத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளான்.
14 வயதான சிறுவன் இணைய விளையாட்டில் ஈடுபட்டபோது தாயார் கண்டித்ததை அடுத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளான்.
இவர்கள் இருவரினதும் உயிர்கள் பறிக்கப்படுவதற்கு புறக்காரணிகள் சில இருந்தாலும் வீடியோ கேம் என்பதுதான் பிரதான காரணியாக உள்ளது. ஆதலால், பெற்றோர்கள் தமது சிறுவர்களின் நலனிலும் அவர்களின் செயற்பாடுகளிலும் அதீத அக்கறையுடன் செயற்பட வேண்டும்” – என்றார்.