“இலங்கையில் சைவக் கோயில்கள் அழிப்பு; ஏன் ஊமையாகவுள்ளார் மோடி?” – காணாமல்போனோரின் உறவுகள் கேள்வி.
இலங்கையில் சைவக் கோயில்கள் அழியும் போது மோடி ஏன் ஊமையாகப் போனார் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவுகளின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள்,
“இன்றும் நாம் இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே நீதியையும் பொறுப்புக்கூறலையும் வழங்க முடியும்.
இலங்கையானது சைவக் கோயில்களை அழிக்கின்றது. இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை.குருந்தூர் மலையில் உள்ள இந்துக் கோயில் அழிக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டு வருகின்றது. நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தும் சிங்கள பௌத்த பிக்குகள் விகாரையைக் கட்டியெழுப்புகின்றனர்.
இப்போது திருக்கோணேஸ்வரம் கோயிலை அழிக்கச் சிங்களம் விரும்புகின்றது. மகாசங்கத்தின் கூற்றுப்படி விஜயன் வருவதற்கு முன்பே திருக்கோணேஸ்வரம் இருந்துள்ளது.
இந்து பா.ஜ.க. எங்கே? அவர்கள் பழைய இந்துக்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காக இருந்தால், அவர்கள் ஏன் ஊமையாகின்றார்கள்? மோடி ஆட்சிக்குத் தமிழர்கள் மீது அக்கறை இல்லை.
இந்தியா தமிழர்களின் நண்பர்கள் அல்லர் என்பதையும் தமிழர்கள் படும் துன்பங்களுக்குச் செவிசாய்க்காக்கமாட்டார்கள் என்பதையும் பா.ஜ.க. தெளிவாகச் சொல்லுகின்றது.
சிங்களவர்கள் உண்மையான வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். எமது நிலத்தையும் கலாசாரத்தையும் ஆக்கிரமிப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
அதேபோல் ஒவ்வொரு தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டுக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” – என்றனர்.