இன்று முதல் 5ஜி… எந்தெந்த நகரங்களுக்கு எப்போது வருகிறது அதிவேக இணைய சேவை..!
இந்தியாவில் முதல் கட்டமாக 5ஜி தகவல் தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் அடுத்த தலைமுறை தகவல்தொடர்பு சேவைக்குள் இந்தியா காலடி எடுத்து வைக்கிறது. ஆனால், ஒரு கிளிக் போல நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த 5ஜி சேவையானது சென்று சேரப்போவதில்லை.
இந்த 5ஜி சேவையானது நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாகவே அமல்படுத்தப்படவுள்ளது. முதல் முதலாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய நகரங்களில் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது.
மற்ற நகரங்கள், கிராமங்களில் அடுத்த சில மாதங்களிலோ, ஆண்டுகளிலோ இந்த 5ஜி சேவை கிடைக்கும். தகவல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகியவை 5ஜி சேவையை வழங்கவுள்ளன. முதல் கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களுக்கு 5ஜி சேவைகளை இந்த நிறுவனங்கள் வழங்கும்.
முன்னணி 13 நகரங்களில் வரும் தீபாவளியில் இருந்து 5ஜி சேவைகளை வழங்கவுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், 2030 இறுதிக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவையை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அதிவேக இணைய சேவையை வழங்கும் 5ஜி தொழில்நுட்பமானது சுகாதாரம், கல்வி, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை என முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை மேம்படுத்தப்பட்ட முறையில் வழங்கும்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இன்று செய்தியாளர்களிடம், அடுத்த 6 மாதங்களில் 200 நகரங்களுக்கு 5ஜி சேவை கிடைக்கும் எனவும், வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15இல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை வழங்க ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.