உக்ரைனின் லைமன் நகரில் இருந்து படைகளை திரும்ப பெற்றது ரஷியா.
ரஷியா உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து வரும் நிலையில் உக்ரைன் படைகள் கிழக்கு பகுதியில் வலுவான எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய ஆக்ரமிப்பில் இருந்த பல பகுதிகளை மீண்டும் அந்த படைகள் கைப்பற்றிய நிலையில், ஒரு காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நகரமாக இருந்த லைமனில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் டாஸ் மற்றும் ஆர்.ஐ.ஏ.செய்தி நிறுவனங்கள் இதை கூறியுள்ளன.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்கு தென்கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் லைமன் நகரம் உள்ளது. ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக உள்ள லைமன், தரைவழி தகவல் தொடர்பு மற்றும் தளவாடங்களை கொண்டு செல்வது ஆகிய இரண்டிற்கும் ரஷ்ய படைகளுக்கு ஒரு முக்கியமான தளமாக இருந்தது.
முன்னதாக உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அதிபர் புதின் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.