நவராத்திரி துர்கா பூஜை விழாவில் பயங்கர தீ விபத்து.. 3 பேர் பலி – உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்
ஆண்டுதோறும் புரட்டாசி மாத காலத்தில் நவராத்திரி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியில் ஒன்பது நாட்களும் துர்கா தேவிக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தொடங்கி தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரியில் முக்கிய நிகழ்வாக துர்கா பூஜை பண்டிகை நேற்று நாட்டின் வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் பிரம்மாண்ட பந்தல் அலங்கார ஆரத்தி பூஜை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் 150க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில், அங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விழா பந்தலில் தீ மளமளவென பரவிய நிலையில், பலரின் உடலிலும் தீப்பற்றியது. இந்த கோர தீவிபத்தில் 10, 12 வயது சிறுவர்கள் இருவரும், 45 வயது பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர தீவிபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தும் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், மாவட்ட ஆட்சியர் கவுரங்க் ரதி ஆகியோர் அங்கு விரைந்தனர்.
மீட்கப்பட்ட அனைவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவுரங் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், மின் இணைப்பு சார்ட் சர்க்யூட் ஆனதே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.