வசந்தகுமார் அவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் ..
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியும் வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியான முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார் வசந்தகுமார். இதற்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியான முதலாவது சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஜே. அன்பழகன் கருதப்பட்டார்.
அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக சனிக்கிழமை (29.08.2020) காலை 10 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
70 வயதான வசந்தகுமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தமது தொகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னையிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீபகாலமாக சென்னையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், வயது மூப்பு, சக்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நோயின் வீரியம் அதிகரித்து அவரது நுரையீரல் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாக அவர் சேர்க்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், கடுமையான கோவிட் நிமோனியா பாதிப்புடன் மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்து கொரோனா தொற்று ஏற்படுத்திய சிக்கல்களால் மாலை 6.56 மணிக்கு அவர் உயிரழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பாக, அவரது மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வசந்தகுமாரின் மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் இரங்கலை பகிர்ந்துள்ளார்.