Lமியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் மீட்கப்பட்டு இன்று சென்னை திரும்புகின்றனர்.
தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஒரு கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், அவர்களை தாய்லாந்து அழைத்துச் செல்லாமல், மியான்மர் நாட்டின் மியவாடி என்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலைவாங்குவதாகவும், சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பிணை கைதிகளாக உள்ள இளைஞர்கள் வேதனை தெரிவித்து வீடியோ வெளியிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை விடுவித்து தாயகத்துக்கு அழைத்து வர நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஏற்கனவே 30 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதற்கட்டமாக 13 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட 13 பேரும் இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளனர். மீதமுள்ள நபர்களையும் விரைந்து மீட்க கோரிக்கை வலுத்து வருகிறது.