கருணை அடிப்படையில் அரசு வேலை என்பது சலுகைதானே தவிர உரிமை அல்ல.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கருணை ரீதியாக வேலை தருவது சலுகை தான் அதை உரிமையாக பெற முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அணு ஸ்ரீ என்ற பெண்ணின் தந்தை அரசு பணியாளர். இவர் திருவாங்கூர் உரம் மற்றும் இரசாயன கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 1995ஆம் ஆண்டு தனது பணிக்காலத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரின் மனைவியும் கேரளா அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதனால், மனைவிக்கு கருணை அடிப்படையில் இவரின் வேலை தர வேண்டும் என்ற சூழலும் விதியும் ஏற்படவில்லை. இந்நிலையில், தந்தை இறந்து 14 ஆண்டுகள் கழித்து அணுஸ்ரீ கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். இவரின் தாயாரும் அரசு வேலையில் உள்ளார், 14 ஆண்டுகள் தாண்டிவிட்டன என்ற காரணங்களால் அணுஸ்ரீ மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த விவகாரம் கேரளா உயர் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசு விதிகளின் படி இது பொருந்தாது என கருணை மனுவை மீண்டும் திருவாங்கூர் உரம் மற்றும் இரசாயன கழகம் நிராகரித்தது.
இதை எதிர்த்து அணுஸ்ரீ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், வழக்கு விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “கருணை அடிப்படையிலான வேலை என்பது உரிய ஆதரவோ வாழ்வாதாரமோ இல்லாத நபர்களுக்கு அவர்களின் சூழல் கருதி வழங்கப்படுகிறது. மனு தாரரின் தாயார் அரசு பணியில் உள்ளார். அதேபோல், தந்தை இறந்து பல ஆண்டுகள் கழித்து கருணை அடிப்படையில் வேலை கேட்பது என்பது அதன் அடிப்படை நோக்கத்தை மீறுவதாகும்.
எனவே, கருணை அடிப்படையில் வேலை என்பது சலுகை தானே ஒழிய உரிமை இல்லை எனத் தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே,பணி வழங்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது செல்லாது” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.