மக்கள் போராட்டத்தை முடக்காதீர்! – அரசுக்குச் சாணக்கியன் எச்சரிக்கை.
“கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயற்பட்டால் அதன் பிரதிபலனை வெகுவிரைவில் அது அனுபவிக்கும். மக்கள் போராட்டத்தை முடக்க அரசு முறையற்ற வகையில் செயற்படுகின்றது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,
“பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதைத் தவிர்த்து விட்டு அரசு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளைப் பின்தொடர்ந்து செல்கின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதற்காக மக்கள் அபிப்பிராயத்தைக் கோரும் வகையில் காங்சேசன்துறை தொடக்கம் தங்காலை வரை கையெழுத்துச் சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டோம். அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை எம்மால் விளங்கிக்கொள்ள முடிந்தது.
நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மூன்று வேளை உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்குத் தீர்வு காண அரசு அவதானம் செலுத்தவில்லை.
மக்கள் போராட்டத்தை முடக்க அரசு முறையற்ற வகையில் செயற்படுகின்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை அரசு முறையற்ற வகையில் நெருக்கடிக்குள்ளாக்குகின்றது. வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களைத் தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள் எனக் குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயம்?
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதன் உண்மைத்தன்மையை அரசு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குமாறு பலமுறை வலியுறுத்துகின்றோம். 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் முதலீடுகளைத் தடை செய்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தத் தடையை நீக்கினார். அடுத்த ஜனாதிபதி எவ்வாறு செயற்படுவார் என்பதை எம்மால் குறிப்பிட முடியாது.
நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு செயற்பட்டால் இந்த அரசும் அதிக நாட்கள் பதவியில் இருக்க முடியாது” – என்றார்.