இந்த ஆட்சி நீடித்தால் சர்வதேச ஆதரவை முற்றாக இழக்கும் இலங்கை!
“இந்த ஆட்சி நீடித்தால் ஜெனிவாவில் இலங்கைக்கு 6 நாடுகள் மட்டுமல்ல எந்தவொரு நாடும் ஆதரவு வழங்க முன்வராது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின்றி இலங்கை அநாதையாகும் நிலையே ஏற்படும்.”
இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான ‘சுதந்திர மக்கள் சபை’யின் முக்கியஸ்தரும் சட்டத்துறை பேராசிரியருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
‘ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த பிரேரணை நாளை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வாக்களிக்கத் தகுதியுள்ளா 47 நாடுகளில் ஆக ஆறு நாடுகள் மாத்திரமே தமக்கு ஆதரவாக – பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று இலங்கை அரசு அச்சம் கொண்டுள்ளது’ எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் எமது நாட்டுக்கு ஆதரவாகவே இருப்பேன். இலங்கை மீதான சர்வதேசப் பொறிமுறையை ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன்.
உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்ளகப் பொறிமுறையூடாகவே தீர்வு காண வேண்டும்.
நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலங்களில் ஜெனிவா விவகாரங்களை நாட்டுக்கு ஆபத்து ஏற்படாதவாறும், நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படாதவாறும் சாதுரியமாகக் கையாண்டேன்.
ஆனால், தற்போது நிலைமை எல்லை மீறிப் போகின்றது போல் தெரிகின்றது. இந்த ஆட்சி நீடித்தால் ஜெனிவாவில் இலங்கைக்கு 6 நாடுகள் மட்டுமல்ல எந்தவொரு நாடும் ஆதரவு வழங்க முன்வராது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின்றி இலங்கை அநாதையாகும் நிலையே ஏற்படும்.
எனவே, ஜனநாயக வழியில் இந்த ஆட்சியை நாம் கவிழ்த்தே தீர வேண்டும். நாட்டின் மீது பற்றுள்ள அனைவரும் இந்த நடவடிக்கைக்காக ஓரணியில் திரள வேண்டும்” – என்றார்.