வசந்த முதலிகேவையைச் சுட்டுப் படுகொலை செய்ய முயற்சியா? – அரசிடம் சஜித் கேள்வி (Video)
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இரவு நேரங்களில் எதற்காக வெளியில் அழைத்துச் செல்லப்படுகின்றார்? அவரைச் சுட்டுப் படுகொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றதா?”
இவ்வாறு அரசிடம் கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கேள்வியைத் தொடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் சுமார் 48 நாட்களுக்கு அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.
வசந்த முதலிகே இரவு நேரத்தில் மல்வானை, கடவத்தை, கம்பஹா போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.
எதற்காக இவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றார்? இறுதியில் அவரைச் சுட்டுக்கொலை செய்துவிட்டு, அவர் தப்பிச் செல்ல முயன்றார் என்ற குற்றத்தை முன்வைக்கும் முயற்சிகள் நடக்கின்றதா?
மாணவர்கள் மனித உரிமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது ஒருபோதும் பயங்கரவாத நடவடிக்கை என்று அர்த்தப்படாது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு நடைபெறும் தருணத்தில், இவ்வாறான நடவடிக்கைளை முன்னெடுப்பது இலங்கை மீது மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு அரசு உந்துதல் அளிக்கின்றது.
ஆளும்கட்சி, ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குத் தவறியுள்ளது.
முட்டாள்தனமான அரசுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடுப்படுகின்றது.
பயங்கரவாதிகளுக்குத் துணைபோக நாம் விரும்பவில்லை. தடுத்துவைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது சாதாரண முறையில் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்” – என்றார்.
இதன்போது, உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
“எதிர்க்கட்சித் தலைவரே, அரசியல்வாதிகளின் இல்லங்களுக்குத் தீ வைத்தவர்களுக்குத் தலைவராகச் செயற்பட்டார்.
பயங்கரவாதத்துக்குத் துணைபோகவில்லை என்று கூறிக்கொண்டு அவர்களே அராஜகம் செய்கின்றனர். தற்போது பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதைகளை ஊக்குவிக்கின்றனர்” – என்றார்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், “பகிடிவதையை நாமும் எதிர்க்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அப்பாவிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டாம். அதனைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடியுங்கள்” – என்றார்.