சர்வதேசத்திடம் நீதி தேடி அலைகின்றனர் தமிழர்! – தேசிய இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
“இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருப்பதால்தான் மூன்று தசாப்த காலங்கள் போர் நீடித்தது. இந்தக் கொடிய போரால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அதனால்தான் அவர்கள் இன்று சர்வதேசத்திடம் நீதி தேடி அலைகின்றார்கள். எனவே, தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டு அனைவரும் ஓரணியில் ஒரே திசையில் பயணிக்க முடியும்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறுகையில்,
“பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கண்டால் மாத்திரம் நாடு மீண்டெழாது. தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு கண்டே ஆக வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாவிட்டால் சிங்களவர்கள் ஒரு திசையிலும், தமிழ் – முஸ்லிம் மக்கள் வேறொரு திசையிலும் பயணித்துக்கொண்டே இருப்பார்கள்.
இதனால்தான் நாளுக்கு நாள் பிரச்சினைகள் உருவாகின்றன; கருத்து மோதல்களும் ஏற்படுகின்றன.
இந்த நிலைமை மக்களுக்கும் அழகு அல்ல. நாட்டுக்கும் நன்மை அல்ல.
எனவே, எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – என்றார்.