போலி புன்னகையுடன் உலவுகிறேன்..! சிக்கிய டைரி – டிஜிபி கொலையில் கைதான இளைஞர்
அன்பான மரணமே என் வாழ்வில் வா.. என்னை மன்னித்துவிடு.. ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியாவை கொலை வழக்கில் கைதாகியுள்ள அவரது வீட்டு பணியாளர் யாஷிர் அஹமது லோஹர் (வயது 23) டைரியில் இருந்த வரிகள். இதன்மூலம் யாஷிர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு 3-நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜம்முவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாகவும் இது விவாதத்தை கிளப்பியது. மேலும் இந்த படுகொலைக்கும் தீவிரவாத அமைப்புக்கும் எதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உடலில் தீக்காயங்களுடன் லோஹியாவின் உடல் அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டது. அவரது அறையில் தீப்பிழம்புகளை கண்ட பின்னரே பாதுகாப்புகாக இருந்த காவலர்கள் விரைந்துள்ளனர். அப்போது அவரது அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்துக்கொண்டு தான் காவலர்கள் உள்ளே சென்றுள்ளனர். லோஹியாவின் சொந்த வீட்டில் பராமரிப்பு பணிகள் நடந்துக்கொண்டிருப்பதால் தனது குடும்பத்தினருடன் அவரது நண்பர் வீட்டில் குடியிருந்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது அவரது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பணியாளர் யாஷிர் கடந்த 6 மாதங்களாக இவரது வீட்டில் வேலை செய்து வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொண்டு நிறுவனம் நடத்தி வரும் லோஹியாவின் நண்பர் ஒருவர் மூலம் யாஷிர் பணிக்கு சேர்ந்துள்ளார். சம்பவம் நடந்த போது லோஹியா தனது அறையில் வீங்கியிருந்த தனது கால்களுக்கு எண்ணெய் தேய்ந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது அறைக்கு சென்ற யாஷிர் கதவுகளை தாழிட்டு உள்ளே சென்றதாக தெரிகிறது.
கெச்சப் பாட்டிலை உடைத்து கழுத்தறுத்துள்ளதாகவும் தலையணையில் நெருப்பு பற்ற வைத்து லோஹியா மீது வீசியதும் தெரியவந்துள்ளது. அந்த அறையை சோதனை செய்தபோது லோஹியா தப்பிப்பதற்கான முயற்சிகளை எடுத்ததற்கான தடயங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட யாஷிர் அவரது சொந்த கிராமத்தில் இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியேறியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. லோஹியா வீட்டில் பணிக்கு சேர்வதற்கு முந்தைய 18 மாதங்கள அவர் எங்கிருந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸார் முதற்கட்ட விசாரணையில் இந்த படுகொலைக்கும் தீவிரவாத அமைப்பு தொடர்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருந்தும் அனைத்து கோணங்களிலும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய யாஷிர் தன்னுடைய வாழக்கையால் மிகுந்த சலிப்படைந்தது அவரது டைரி மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லமல் யாஷீர் முரட்டு சுபாவம் கொண்ட நபர் என்றும் மனஅழுத்தத்துடன் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த டைரில் இருந்த வரிகளும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
“அன்பான மரணமே என் வாழ்வில் வா.. என்னை மன்னித்துவிடு.. நான் மோசமான நாளை, வாரத்தை, மாதத்தை, வருடத்தை கொண்டுள்ளேன். என் வாழ்வில் அன்பு இல்லை.. 99 சதவிதம் சோகமே உள்ளது.100 சதவீதம் போலியான புன்னகையுடன் நான் உலவுகிறேன்” என டைரியில் எழுதியுள்ளார். டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியாவை எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.