திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலை துறை சார்பில் நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வள்ளலார்- 200 இலட்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்பணி விரைவில் தொடங்கும் என்றார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பெரியார் பிறந்தநாள் விழாவை சமூகநீதி நாளாகவும் அம்பேத்கர் பிறந்தாள் விழாவை சமத்துவ நாளாகவும் அறிவித்தது திராவிட மாடல் ஆட்சி. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏன் அதிர்ச்சியாக கூட இருக்கலாம்.
மேலும் பேசியவர் திமுக தலைமையிலான அரசு என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது என்பதுபோல சிலர் சித்தரித்து பேசி வருவதாக கூறினார். மதத்தை வைத்து பிழைக்க கூடிய சிலர், திமுகவினர் பேசுவதை வெட்டி ஒட்டி அரசியல் பிழைப்பு நடத்துவதாகவும் விமர்சித்தார். ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல திமுக என்று கூறிய முதலமைச்சர், ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களுடைய சுயநலனுக்கும் பயன்படுத்துவோருக்கு எதிரானது என்று கூறினார். உயர்வு தாழ்வு கற்பிப்பவர்களுக்கு எதிரான கட்சி திமுக என்றார்.
இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.