சிறிதரன் பதவி விலகினால் நானும் விலகத் தயார் – குணாலன் அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அதனைக் கட்சித் தலைவர்சேனாதிராசாவிடம் கையளித்தால் அந்நிமிடமே தனது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கத் தயாராக உள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி உ செயலாளர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம் வருமாற்,
கடந்த மாதம் சாவகச்சேரியில் அத்தொகுதிக் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எமது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். ‘புங்குடுதீவைச் சேர்ந்த குணாளன் என்பவரை கட்சியிலிருந்து நீக்கினால் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா, நடைபெறுகின்ற பொதுத்தேர்தலில் தோல்வியுற்றாலும் அவருக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தை வழங்குவேன்’ என்று. இதனை நான் தொலைக்காட்சி செய்தி சேவை ஒன்றினூடாக பார்த்திருந்தேன்.
உண்மையிலேயே எனக்கும் சிறீதரனுக்கும் எந்தவிதமான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளோ அல்லது ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினைகளோ இருக்கவில்லை. நானும் சில இளைஞர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் போன்றவர்களும், எமது உயிரைப் பணயம் வைத்து ஈ.பி.டீ.பியின் கோட்டையாகக் கருதப்பட்டிருந்த தீவகத்தினை (ஊர்காவற்துறைத் தேர்தல் தொகுதியினை) பெருமளவில் மீட்டிருந்தோம்.
இடைப்பட்ட இக்காலத்தில் ஈ.பி.டீ.பி மற்றும் அரசு தரப்புகளுக்கு எதிரான பல நீதிமன்ற வழக்குகள், பொலிஸ் நிலைய விசாரணைகளையும் நான் நேரடியாக எதிர்கொண்டிருந்தேன். யாழ் தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய தொகுதிகளில் அரசியல் பணிகளை மேற்கொள்வது போன்று ஊர்காவற்துறை தொகுதியில் இலகுவாக மேற்கொள்ள முடியாது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். பல்வேறு சிரமங்களின் மத்தியில் எமது சொந்த நிதியில் பல இலட்சம் ரூபாய்களை செலவழித்து கட்சிப் பணிகளையும் பலதரப்பட்ட சமூகப் பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு வந்ததை தலைவர் நன்கு அறிவார். அவர் அறியாத பல பணிகளும் உண்டு.
இந்நிலையில் கிளிநொச்சித் தொகுதியில் தனிக்காட்டு ராஜாவாகவும் அங்கு எமது கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடிமைகளாகவும் வைத்திருப்பது போன்று தீவகத்தினையும் முழுமையாகத் தன்வசப்படுத்த முயன்றார் சிறீதரன். ஆனால் நாங்கள் கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக காலாகாலமாக நடந்து வருவதால் அவருடைய தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு நாங்கள் இடமளிக்கவில்லை. அதனால் தீவகத்தில் காணப்படுகின்ற கட்சியின் மூலக்கிளைகளின் செயற்பாடுகளை சீர்குலைக்க முயன்றார் சிறீதரன்.
பெரும் சிரமத்தின் மத்தியில் நானும் இளம்பிறையனும் இணைந்து கட்சித் தலைமையின் அனுமதியோடு ஊர்காவற்துறை, வேலணை, புங்குடுதீவு – நயினாதீவு மூலக்கிளைகளை உருவாக்கியிருந்தோம். ஆனால் அவற்றினைப் பொருட்படுத்தாது தனக்கென்று ஒரு சில எடுபிடிகளையும் கிளிநொச்சியிலிருந்து தனது சில அடிப்பொடிகளையும் அழைத்து வந்து சுற்றுலாப் பயணி போல் ஒரு சில மணித்தியாலங்களில் தனது அரசியல் செயற்பாடுகளை தீவகத்தில் முடித்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் தான்தோன்றித்தனமான அரசியலை சிறீதரன் முன்னெடுத்திருந்தார்.
இது தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கனவே நாங்கள் கட்சியின் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியிருந்தோம்.
குறிப்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாங்கள் வெளியிலிருந்து வழங்கிய ஆதரவினால் கிடைக்கப் பெற்றிருந்த துரித கிராமிய எழுச்சித் திட்டத்தினை (கம்பரெலிய) தீவகத்தில் நடைமுறைப்படுத்துவதில் தான்தோன்றித்தனமாக செயற்பட்டிருந்தார் சிறீதரன். கட்சியின் முக்கியஸ்தர்களையும், நீண்ட கால உறுப்பினர்களையும் திட்டமிட்டு புறக்கணித்து தனது புதிய எடுபிடிகளுக்கும், ஈ.பி.டீ.பியின் ஆதரவாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் நான் கட்சியின் நிர்வாகத்திடம் வழங்கியிருந்தேன். ஆனால் சிறீதரனின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளைக் கட்சி கட்டுப்படுத்தவில்லை.
நாங்கள் பாடுபட்டு வெல்ல வைத்த பல பிரதேசசபை உறுப்பினர்களையும், கம்பரெலியாவைக் காட்டி தன்வசம் இழுத்திருந்தார். தீவகத்தில் 27 தேர்தல் வட்டாரங்கள் காணப்படுகின்றன. கம்பரெலிய திட்டம் ஊடாக தீவகத்திற்கு கிடைத்திருந்த 30 கோடி ரூபாயினை சரியாக பங்கிட மறுத்திருந்தார். தனது புதிய எடுபிடி ஒருவரின் வட்டாரத்துக்கு மாத்திரம் 5 கோடி ரூபாய்களை செலவளித்திருந்தார். அந்த வட்டாரத்துக்கே சஜித் பிரேமதாச மூலம் வீட்டுத்திட்டம் ஊடாக கிடைக்கப்பெற்ற 50 வீடுகளையும் வழங்கியிருந்தார். வேலணைப் பிரதேச சபையின் தவிசாளர் வேட்பாளராக போட்டியிட்டு குலுக்கல் முறையில் துரதிஷ்டவசமாகத் தோல்வியடைந்திருந்த எனது சகோதரன் கருணாகரன் நாவலனை திட்டமிட்டு புறக்கணித்து வந்தார் திரு. சிறீதரன். கம்பரெலியத் திட்டத்தில் அவருடைய வட்டாரத்துக்கு ஒரு கோடி ரூபாயினையேனும் ஒதுக்கியிருக்கவில்லை.
2018ல் மார்ச் மாதத்தில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினராக திரு.கருணாகரன் நாவலன் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து இன்றுவரை தனது மாதாந்த சம்பளத்தினை பொதுநலப் பணிகளுக்காகவே பயன்படுத்திவருவதையும் நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறீதரன் கட்சியின் மூலக்கிளைகள், வாலிப முன்னணி போன்றவற்றின் தீர்மானங்களைப் புறக்கணித்து கட்சி உறுப்பினர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி தன்னிச்சையாகவே தீவகத்தில் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டிருந்தார். கம்பரெலிய திட்டத்தை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்தவரே இந்த சிறீதரன். அபிவிருத்தி அரசியல் எமக்குத் தேவையில்லை என்று கூறி ஊடகங்களிலும் கருத்துகளை முன்வைத்தார். ஆனால் அதே சிறீதரன் பின்னர் இந்தக் கம்பரெலியவுக்காக கட்சியினரிடையே குழப்பங்களை விளைவித்தார்.
சிறீதரனோ அல்லது அவருக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களோ கட்சியின் தலைவரும், யாழ் தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான மாவை. சேனாதிராசாவின் 8 ஆம் இலக்கத்திற்கு வாக்களிக்குமாறு எச்சந்தர்ப்பத்திலும் மக்களைக் கேட்டிருக்கவில்லை. அது தெடர்பில் தலைவரும் நன்கறிவார். இக்கடிதத்தோடு அது தொடர்பான சில ஆதாரங்களையும் நான் வழங்குகின்றேன். கிளிநொச்சித் தொகுதியிலும் கட்சித் தலைவருக்காக இவர்கள் வாக்குச் சேகரிக்கவில்லை. விருப்பு வாக்குப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையினையே முதன்மை வேட்பாளர் மாவை.சேனாதிராசா அங்கு பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால் மாவை.சேனாதிராசாவின் சொந்தத் தொகுதியான காங்கேசன்துறையில் அவரோடு இணைந்து பயணிப்பது போன்று மக்களுக்கு நடித்து கணிசமான வாக்குகளை அபகரித்துள்ளார் இந்த சிறீதரன்.
இலங்கையின் வரலாற்றிலேயே கட்சித் தலைவர் மற்றும் முதன்மை வேட்பாளருக்கு வாக்குச் சேகரிக்காத சக வேட்பாளர்களைக் கொண்ட ஒரே கட்சி எங்களுடைய தமிழ் அரசுக்கட்சிதான்! இதனை நாங்கள் 2015 தேர்தலிலும், 2020 தேர்தலிலும் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். இந்த விடயத்தில் உச்சக்கட்டமானவரே சிறீதரன் ஆவார்.
2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சட்டவிரோதமான முறையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பேரும் நாடாளுமன்றம் சென்றிருந்ததாக ஆனந்த சங்கரி, சிங்கள இனவாத அமைப்புகள், தென்னிலங்கையிலுள்ள பல பல்கலைக்கழக பேராசிரியர்கள் பகிரங்கமாக குற்றஞ் சாட்டியிருந்தனர். செத்தவன் கூட எழும்பி வந்து கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்திருந்ததாக ஆனந்த சங்கரி அப்போது கிண்டல் அடித்திருந்தார். 2004ம் ஆண்டுத் தேர்தலில் எனது தந்தை சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தீவகமெங்கும் ஏற்பாடு செய்திருந்தார். பிரச்சாரப் பணிகளும் அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சிறீதரன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அதனைக் கட்சித் தலைவர் மாவை. சேனாதிராசாவிடம் கையளிக்கின்றேன் என்று ஆதாரபூர்வமாக ஊடகங்கள் முன்னிலையில் தெரிவிப்பாராயின் அந்நிமிடமே எனது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கத் தயாராக உள்ளேன். சிறீதரன் ராஜினாமா செய்தால் விருப்பு வாக்குப் பட்டியலில் அடுத்த நிலையில் உள்ள சசிகலா ரவிராஜ் அல்லது ஈஸ்வரபாதம் சரவணபவன் அப்பதவியைக் கைப்பற்றக் கூடுமென சிலர் கூறக்கூடும். அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள மாவை சேனாதிராசாவுக்கே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சென்றடையும் எனும் உத்தரவாதத்தினை அவர்களிடமிருந்து நான் பெற்றுத்தரத் தயாராகவே இருக்கின்றேன். ஆகவே எந்தவித தயக்கமுமின்றி சிறீதரன் அவர்கள் தனது நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பதவியை ஏற்கனவே கூறியபடி கட்சியின் தலைவருக்கு அர்ப்பணிக்க முடியுமென்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” – என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..