22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது நடைபெறும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் ஆரம்பமாக இருந்தது.
இந்நிலையில் சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு மாற்றப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதேவேளை, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
22 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்குச் சென்ற குழு ஒரு கருத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் மற்றொரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளன.
22 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முதன்முதலில் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாற்றமான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்குத் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையிலே, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.