சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்! – நாடாளுமன்றில் தெரிவிப்பு.
புலனாய்வாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் தனக்கும், சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம்.
இதன்போது எம் இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வருவதை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட epbey 2600 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றே எம்மைத் பின்தொடர்ந்து வந்தது. இதுதொடர்பில் எமது பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
பொலிஸ் பொறுப்பதிகாரி அலோக்க பண்டார சிறிது நேரத்துக்குப் பின்னர் எங்களது பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புலனாய்வாளர்களே எங்களைப் பின்தொடர்கின்றனர் என்று தெரிவித்தார்.
இந்தநேரத்தில் எங்கள் இருவர் சார்பிலும் நான் இந்த இடத்தில் முக்கிய கேள்வி ஒன்றை முன்வைக்க விரும்புகின்றேன். எதிர்க்கட்சியில் உள்ளவர்களை ஏன் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்றனர்?
புலனாய்வாளர்களுக்கு எவ்வாறு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார்கள் சைக்கிள்கள் வழங்கப்பட்டன என்கின்ற கேள்வியைம் நான் முன்வைக்கின்றேன்.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறான செயற்பாடுகளால் எங்கள் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” – என்றார்.