இலங்கைக்குத் தோல்வியாக இருந்தாலும் தமிழருக்கு வெற்றியல்ல!

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம், இலங்கைக்குத் தோல்வியாக இருந்தாலும், தமிழர்களுக்கு வெற்றியல்ல என்று நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இந்தத் தீர்மானம் வழியமைக்கவில்லை என்பதோடு, தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற இலங்கையின் இனப்படுகொலை இராணுவமானது, பொறுப்புக்கூறலுக்கான அச்சமேதுமின்றி, தமிழர்கள் எதிரான தனது பாரிய மனித உரிமைமீறல்களைச் தொடரவே வழிசெய்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலநீடிப்பு வழங்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்துக்கு 20 நாடுகள் ஆதரவாகவும், 7 எதிராகவும் வாக்களித்திருந்தன. 20 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழர் அரசியல் தரப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்புக்கூறவைக்க இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்துமாறு வேண்டப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கை புறந்தள்ளப்பட்டு, இலங்கைக்கு மேலும் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது ஐ.நா. எதற்காக உருவாக்கப்பட்டதோ, அதன் தார்மீகத்துக்கு மாறாக அமைந்துள்ளதோடு, அரசுகள் தமது பூகோள புவிசார் நலன்களை அடைய, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மேலும் அநீதி இழைப்பதாகவே உள்ளது.

இந்தியா மீண்டும் வாக்களிக்காமல் விலகியதால் ஈழத் தமிழர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இலங்கை தனது ‘சீனத் துரும்புச்சிட்டை’யை நன்றாகக் கையாண்டு அதன் அண்டை நாடான இந்தியாவைப் பயமுறுத்தி அமைதியாகிவிட்டது.

பிராந்திய வல்லரசான இந்தியாவும், உலக வல்லரசும் தார்மீகக் கோட்பாடுகள், துணிவு, உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படும் என்று ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஐ.நாவின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி இறுதிப்போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட 70 ஆயிரம் பேர் விடயத்தைப் புறந்தள்ளிவிட்டு, தென்னிலங்கை கிளர்ச்சியில் உயிரிழந்த 10 பேருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.

தமிழ்த் தேசத்தின் மீதான இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பானது சிங்களமயமாக்கலுக்கும் பௌத்தமயமாக்கலுக்கும் அரணாக இருப்பதுடன், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்டுகின்றது.

குறைந்தபட்சம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தைக் குறைப்பதற்கும், வெளியேறுவதற்குமான கால அட்டவணை அமைந்திருக்க வேண்டும்.

ஜெனிவாவுக்கு அப்பால் சர்வதேச ஜனநாயக சட்டவெளியில் நீதிக்கான புதிய களங்களை உருவாக்க நாம் முனைகின்றோம்.

ரோம் உடன்படிக்கையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை இலங்கை நிராகரித்துள்ளது. ஆனால், அரசியல் இறைமையுள்ள ஒரு தேசமாக, நாடுகடந்த தமிழீழ அரசு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக்கொள்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.