தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலி – அமெரிக்கா கண்டனம்.
தாய்லாந்தின் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது.
இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.
இந்த பயங்கர சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 குழந்தைகளும் அடங்கும். மற்ற 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள். இச்சம்பவம் அந்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்நிலையில், தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொடூர சம்பவத்தால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. அமெரிக்காவின் கூட்டாளியான தாய்லாந்திற்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.