நில ஆவணங்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு திட்டம்!
நாடு முழுவதும் நில ஆவணங்களை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் நில வளத்துறை இணைச் செயலாளர் சோன்மோனி போரா கூறியதாவது:
நாடு முழுவதிலும் உள்ள பலர் நில ஆவணங்களில் மொழியியல் தடைகளை எதிர்கொள்கின்றனர், இதனை போக்கும் விதமாக மத்திய அரசு, இப்போது நில ஆவணங்களில் மொழிபெயர்ப்பு முறையை கொண்டு வருவதன் மூலம் தீர்க்க திட்டமிட்டுள்ளது.
அதாவது, நாட்டில் உள்ள அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது மத்திய அரசு.
இந்த புதிய திட்டத்தை சோதனை முறையாக தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப்பிரதேசம், பிகார் திரிபுரா மற்றும் ஜம்மு,காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் தொடங்க உள்ளது.
“இது நில ஆவணங்களில் உள்ள மொழித் தடையை போக்குவதற்கு உதவும். இதற்காக புதிய மென்பொருள் சுமார் ரூ.11 கோடியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆண்டில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், நில ஆவணங்கள் மொழிபெயர்ப்பு அது வழங்கும் தகவல்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்றார் போரா.
இதனால் பத்திரப்பதிவுத் துறையில் நிலவும் மொழித் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.