திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி? – பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
திமுகவின் சட்டவிதிகளின் படி ஒரு பெண் உட்பட 5 பேர் துணை பொதுச்செயலாளராக செயல்படலாம். தற்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ளனர்.5-வது துணை பொதுச்செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் செப்டம்பர் 20-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அந்தப் பதவி காலியானது.
தற்போது திமுகவில் பெண்களுக்கான பிரதிநிதித்துவ அடிப்படையில் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை மறுதினம் நடக்கும் திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டாலும் தற்போதுள்ள மகளிரணி செயலாளர் பதவியிலும் கனிமொழி தொடர்வார் என கூறப்படுகிறது.