உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலி : இருமல் மருந்துகளை ஆய்வகத்திற்கு அனுப்பிய மத்திய அரசு!

உலக சுகாதார அமைப்பின் புகாருக்குள்ளான இருமல் மருந்தின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

ஹரியானாவை தலைமையிடமாக கொண்ட மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் தயாரித்த Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என மருந்துகளை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்த நிலையில், கடந்த ஜூலை 19 அன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, காம்பியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் மருத்துவமனைகளில் பாரசிட்டாமால் சிரப்பின் பயன்பாட்டை நிறுத்துமாறு கூறியிருந்தது.

நோயாளிகளுக்கு இந்த மருந்துகளால் தீங்கு ஏற்படாமல் இருக்க, இவற்றைப் புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதானோம் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, குறிப்பிட்ட மருந்துகளின் மாதிரிகளை சண்டீகரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, குறிப்பிட்ட மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கவில்லை என கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.