ஐ.நாவின் பிடியிலிருந்து 50 படை அதிகாரிகளை உடன் காப்பாற்றுங்கள்! – அரசிடம் விமல் வேண்டுகோள்.
“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பேராபத்து மிக்கது. இந்தத் தீர்மானத்துக்கு இணங்க, இலங்கையின் சுமார் 50 படை அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சில நாடுகளில் குறித்த படை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி., இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பில் இலங்கை அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இல்லையேல், நாட்டைப் பாதுகாத்த படையினருக்கு இது துரோகமாக இருக்கும் என்றும் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுவரை காலமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது அமைச்சர் அலி சப்ரி, உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மேற்கொள்ளப்படுகின்றது என்று எவ்வாறு கூற முடியும் என்றும் பீரிஸ் கேள்வி எழுப்பினார்.
இதனை எவ்வாறு ஜெனிவா பேரவை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் என்றும் கேட்ட அவர், இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினை என்று குறிப்பிட்டார்.
எனினும், பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருந்த நாடுகள், தமது உள்நாட்டு தீர்மானங்களுக்கு இணங்க செயற்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
எனினும், மஹிந்த – கோட்டாபய 11 ஆயிரம் விடுதலைப்புலிகளை விடுவித்தமை மற்றும் ரணில் விக்கிரமசிங்க தற்போது மேற்கொண்டு வரும் மனித உரிமை செயற்பாடுகளையும் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.