திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் உள்ள காப்பகத்தில் உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு நேற்று உயிரிழந்தனர். 11 மாணவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமுநாதன் மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

மாணவர்கள் தங்கி இருந்த இடம், இறந்து கிடந்த இடம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அவர்கள், அங்கு சிகிச்சையில் உள்ள மாணவர்களிடம் நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கீதா ஜீவன், போதிய அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுவதால் காப்பகத்தை மூடுவதாக அறிவித்தார்.

சிறுவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில், பொறுப்பாளர்கள் யாரும் காப்பகத்தில் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், அஜாக்கிரதை, மெத்தன போக்குடன் செயல்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், காப்பகத்தின் நிர்வாகி மீதும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருப்பூர் காப்பகத்தில் சிறுவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பித்தனருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.