பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 50 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹஷான் ஜீவந்த குணதிலக்க விடுதலை
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹஷான் ஜீவந்த குணதிலக்கவை விடுதலை செய்யுமாறு தங்காலை நீதவான் ஹேமந்த புஸ்பகுமார இன்று (7) உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், ஹஷான் ஜீவந்த குணதிலக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு போதிய உண்மைகள் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருடன் கைது செய்யப்பட்ட ஹஷான் ஜீவந்த, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஹஷான் ஜீவந்த தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், அவர் 50 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், அவரை விடுதலை செய்யுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை காவல்துறை விடுத்த கோரிக்கைக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையால் ஆகஸ்ட். கடந்த 18ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.