ஜெனிவா மாநாடுகளின்போது இன, மத முறுககலை ஏற்படுத்த நாடகமாடும் கூட்டமைப்பு! – விமல் குற்றச்சாட்டு.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள், ஜெனிவா மாநாடு நடைபெறும் காலங்களில் ஏதாவது ஒரு நாடகத்தைக் காட்டி மக்கள் வாழ்க்கையைச் சீர்குலைக்கின்றனர் அல்லது இன, மத முறுகல்களை ஏற்படுத்துகின்றனர்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் முன்வைத்த கருத்தைத் தொடர்ந்து, அது பற்றி கருத்துக் கூறுகையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.
அதன்போது விமல் வீரவன்ச மேலும் தெரிவிக்கையில்,
“குருந்தூர்மலை விகாரை என்பது இந்த நாட்டின் வரலாற்று விகாரையாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏதேனும் பௌத்த வழிபாட்டிடம் இருந்தால் அதற்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். அதற்கு வெளியே வேண்டியளவு இந்து அல்லது வேறு மதங்களைச் சேர்ந்த வழிபாட்டிடங்கள் உள்ளன. அவற்றுக்கு எவரும் இடையூறுகளை ஏற்படுத்துவதில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில், ஏதாவது ஒரு நாடகத்தைக் காட்டி மக்கள் வாழ்க்கையைச் சீர்குலைக்கின்றனர் அல்லது இன, மத முறுகல்களை ஏற்படுத்துகின்றனர்.
இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களே செய்கின்றனர். இவர்களே தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்க முற்பட்டனர்.
அவ்வாறு செய்துவிட்டு இந்த நாட்டின் வரலாற்றுப் புராதன குருந்தூர்மலை விகாரையில் பௌத்தர்கள் சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். இது மிகவும் தவறாகும்.
இங்குள்ள எந்தவொரு இந்து ஆலயம் தொடர்பில் யாராவது எதனையாவது கூறுகின்றனரா? யாராவது பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனரா?” – என்றார்.