தமிழ் மக்களின் பிரச்சினைகள்: ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு! – அமைச்சர் அமரவீர தெரிவிப்பு.
“குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.”
இவ்வாறு கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07) குருந்தூர்மலை ஆதி சிவன் கோயில் ஆக்கிரமிப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. முன்வைத்த கூற்றுக்கள் தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறுகையில்,
“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குருந்தூர்மலை பிரச்சினைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விடயத்தில் நான் தனிப்பட்ட ரீதியிலும் கவனம் செலுத்துவேன்.
எந்தவிதத்திலும் எவரும் இனவாதமாகச் செயற்படுவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது.
நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படுபவர். நாட்டின் அபிவிருத்தி உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதுவே அவசியமாக உள்ளது” – என்றார்.