எல்.கே.ஜி, யு.கே.ஜி சிறப்பு ஆசிரியர்களுக்கு வெறும் ரூ.5000தான் சம்பளமா? வழி செலவுக்கே பத்தாது… ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளவும், அவர்களின் சம்பளத்தை நிர்ணயத்தும் அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அரசாணையை வெளியிட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாதம் 5000 என அரசு நிர்ணயத்துள்ளது. மேலும் அவர்களின் பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓர் ஆசிரியருக்கு மாதம் 5000 ரூபாய் தான் சம்பளம் என்றால், ஒரு நாளைக்கு 166 ரூபாய்தான். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு ஒரு நாள் 281 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் சிறப்பாசிரியர்களுக்கு ஒரு நாள் 166 ரூபாய் என்பது திறன்மிகு பணியாளர்களுக்கு கொடுக்கப்படும், குறைந்தபட்ச கூலிச் சட்டத்திற்கு முரணானது. மேலும் 5000 ரூபாய் என்பது அவர்களுக்கான வழிச் செலவிற்கே போதுமானதாக இருக்காது.
மேலும் 11 மாதங்கள் மட்டுமே பணி என்ற கால அளவு இருப்பதால் இந்த பணியில் சேருவதற்கான ஆர்வத்தை குறைக்கும் வகையில் உள்ளது. மேலும், கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், அரசுக்கு இந்த வகுப்புகளை தொடர்ந்து நடத்த ஆர்வம் இல்லையோ என்ற சந்தேகம் வருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மழலையர் வகுப்புகளை முதலில் நிறுத்த முடிவெடுத்த திமுக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பின் காரணமாக அதை தொடர்ந்தது என்று சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், தமிழக முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, சிறப்பாசிரியர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், கால அளவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பணி நியமனத்தை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.