ஜெனிவாவில் இலங்கைக்குப் பலத்த அடி! – சஜித் சுட்டிக்காட்டு.
“சர்வதேசத்தை வெற்றிகொள்ளும் அரச தரப்பினர் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த போதும், ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை ஊடாக சர்வதேசத்திடம் தோல்வியடைந்தவர்களே இருக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07) இரண்டாவது நாளாக நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாடு என்ற ரீதியில் பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. எங்களுக்கு எதிராக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. அத்துடன் 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளன.
இதில் எங்களுக்கு ஆதரவாக இருந்த நாடுகளைப் பார்க்கும் போது அந்த நாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.
ஏன் மற்றைய நாடுகளுடனும் பேசி ஏதாவது பேச்சு மூலமாக ஏன் எமது நாட்டின் பயணத்தை வெற்றிகொள்ள முடியவில்லை.
அனைத்து நாடுகளையும் வெற்றிகொண்ட அரசு இருக்கின்றது என்றே நினைத்தோம். ஆனால், அந்த விடயத்தில் நாங்கள் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளோம்.
அத்துடன் முதற்தடவையாகப் பொருளாதார குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வங்குரோத்து அரசு தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டம் அரசிடம் இருக்கவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கும் போது இவ்வாறான நிலைமை ஏற்படும் என்று நினைத்தும்கூடப் பார்க்கவில்லை” – என்றார்.