”திருக்குறளை முழுமையாக படிங்க” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறளை அனுப்பி வைத்து போராட்டம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திருக்குறளை முழுமையாக படிக்க வலியுறுத்தி கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆளுநருக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய ஆளுநர், தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ’இந்தப் பிரச்சினை வெள்ளையர்கள் காலத்தில் தொடங்கியதாகவும், குறிப்பாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஜி.யு.போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் முதன்மைக் கடமை என எழுதியுள்ளதாகவும் அவர் பேசினார்.

மேலும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. இந்தப் புதக்கத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த நூலை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் இது தெரியும் என பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் புத்தகங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.