ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்கு அவமானம் – ஹக்கீம் விளாசல்.
“ஜெனிவா தீர்மானம் தொடர்பில் கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும் இம்முறை நடுநிலை வகித்திருக்கின்றமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எமது நாட்டுக்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல அவமானத்துக்கும் உரியது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இதற்கு முன்னர் எமது நாட்டுக்கு எதிராகத் தீர்மானம் வந்தபோது 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன. ஆனால், இம்முறை அது 7 ஆகக் குறைவடைந்துள்ளது.
கடந்த காலங்களில் எமக்கு ஆதரவாக இருந்த நாடுகளும் நடுநிலை வகித்திருக்கின்றமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எமது நாட்டுக்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல அவமானமும் ஆகும்.
அதுமட்டுமன்றி இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் மூலம் எமக்குச் சாதகமான பதில் கிடைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வாறான எந்தச் சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
மேலும், ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டு முதல் தடவையாகக் கொண்டுவரப்பட்டதாகும்.
எமது நடவடிக்கை காரணமாகவே நாங்கள் தேவையில்லாத பிரச்சினைக்குள் சிக்கி இருக்கின்றோம்.
புனர்வாழ்வுச் சட்டமூலம் பயங்கரவாதத் தடைச் சட்டம், இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் எமது நாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகவுள்ளன” – என்றார்.