மீண்டும் ஏவுகணைகளை வீசியது வட கொரியா- ஜப்பானில் பதற்றம்.
அமெரிக்கா, தென்கொரியா கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வட கொரியா மீண்டும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதன் கிழக்குக் கடல் பகுதியில் ஏவியது. அந்த ஏவுகணைகள் ஜப்பான் கரையோர பகுதியில் கீழே விழுந்ததாக அந்நாட்டு கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இதையடுத்து விமானங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவுறுத்தி உள்ளார்.
சந்தேகத்திற்கிடமான ஏவுகணைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யவும், எந்தவொரு தகவலையும் மக்களுக்கு விரைவாகத் தெரிவிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா ஏவுகணை வீச்சு தொடர்வதால் ஜப்பானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தயார் நிலையில் இருப்பதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அச்சுறுத்தலால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.