நாட்டைச் சீரழித்த ராஜபக்ச குடும்பத்துக்கே புனர்வாழ்வளிக்க வேண்டும்! – சாணக்கியன் ஆவேசம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு 5 ஆயிரம் நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

புனர்வாழ்வுச் சட்டம் ஊடாக இந்த நாட்டைச் சீரழித்த மஹிந்த ராஜபக்ச குடும்பம் உட்பட இந்த அரசுடன் இணைந்த அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதனைவிட மோசமான புனர்வாழ்வளித்தல் சட்டத்தைக் கொண்டுவர அரசு முற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்துச் சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி நேற்று மாலை மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்க மக்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பேரணியாகக் கல்முனை வீதியூடாகக் கல்லடிப்பாலம் விளையாட்டு மைதானத்தை அடைந்து அங்கு பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

“இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது கடந்த 40 வருடங்களாக தமிழ் பேசும் மக்களை அடக்கியாண்ட சட்டமாகும். 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய மக்களும் அடக்கப்பட்டார்கள்.

2022 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் மூலம் சிங்கள மக்களையும் கைது செய்து அடக்குமுறைகளை முன்னெடுத்தனர். தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றோம். மிக மோசமான இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அநீதிகள் நடக்கின்றன என்ற போது ஒரு சிலர் பார்வையாளராகயிருந்தாலும் கூட இன்று பெரும்பான்மை சமூகத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்படும்போது இன்று அவர்களுடன் இணைந்து இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று போராடி வருகின்றோம்.

கடந்த 25 நாட்களுக்கு மேலாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

அந்தப் போராட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் இணைத்தே முன்னெடுத்தோம்.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட மூவர் 50 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

50 நாட்களாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு போராட்டம் நடத்தும் இதே மேடையில் எங்களது தமிழ் உறவுகள் கைது செய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5 ஆயிரம் நாட்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.