இந்தியப் பல்கலையுடன் உடன்பாட்டுக்குத் தயங்குகின்றது யாழ். பல்கலைக்கழகம்.
‘இந்தியன் இன்ஸ்ரியூட் ஒப் ரெக்னோலஜி’ உடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழம் உடன்பாடு மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றது என அறியமுடிகின்றது.
பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பின்னடிக்கின்றது எனக் குற்றம் சுமத்தப்படுகின்றது.
இந்தியாவில் மிகப்பிரபலமான – முன்னோடியாக இந்தியன் இன்ஸரியூட் ஒப் ரெக்னோலஜி, உலகில் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அங்கு இயங்கி வருகின்றது.
இதன் அடிப்படையில் இலங்கையிலும் இரண்டு இடங்களில் அதனை நிறுவுவதற்கு விரும்பியிருந்தது. இந்திய அரசு ஊடாக இலங்கை அரசை அணுகியிருந்தது.
இதன்போது தெற்கிலும், வடக்கிலும் ஒவ்வொரு இடங்களில் அமைப்பதை இந்தியா விரும்பியிருந்தது.
தெற்கில் பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்தியன் இன்ஸ்ரியூட் ஒப் ரெக்ரோனலஜி பல்கலையை நிறுவுமாறு இலங்கை அரசு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனாலும், வடக்கில் ஒன்றை அமைப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரியவருகின்றது.
வடக்கில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்துடன் இணைந்து கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள பொறியியல்பீடத்தில் இதனை அமைப்பதற்கு இந்திய அரசு விரும்பியிருந்தது.
அதற்குச் சாதகமான சமிக்ஞையோ அல்லது உரிய பதிலளிப்புக்களோ யாழ். பல்கலைக்கழகத்திடமிருந்து இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
ஆனால், சீனத் தூதுவரின் புலமைப் பரிசில் நிதியை, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கொழும்பிலுள்ள தூதரகத்துக்குச் சென்று பெற்றுக்கொண்டார். இது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டுக்கு மாறானதொன்றும்கூட.
மேலும், சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்றுடன் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள விவசாயபீடம் ஆராய்ச்சி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட இருந்தது.
மாணவர்களின் எதிர்ப்பால் அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் அதனை நிறைவேற்றுவதற்கான தீவிரத்தை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகின்றது.
புவிசார் அரசியல் பதற்றமான சூழலில், சீனாவுடன் நெருங்கிச் செயற்படுவதற்கு முற்படும் பல்கலைக்கழக நிர்வாகம், இந்தியாவுடனான உறவுக்குச் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தாமல் இருப்பது மேலும் குழப்பங்களுக்கே வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது.