யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் மாதாந்தக் கொடுப்பனவு நிறுத்தம்?
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கடந்த மாத கூட்டத்தில் பங்குபற்றி அதன்போது ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின்னர் வெளிநடப்புச் செய்த உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்காமை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்குத் தாம் தயாராகி வருவதாக உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மாநகர கட்டளைச் சட்டத்தில் கூட்ட வரவு பதிவேட்டில் கையொப்பமிட்டால் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்று உள்ள நிலையில் அதற்கு மாறாக மேயர் வி.மணிவண்ணன் செயற்படுகின்றார் என்று அவர்கள் முறைப்பாடு செய்யவுள்ளனர் எனவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் 27ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு மாதாந்தம் கூட்டம் மேயர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் வகையில் மேயரும், ஆணையாளரும் ஜப்பானிய தூதரக வாகன விடயத்தில் நடந்து கொண்டமையைக் குறித்து அதிருப்தியை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நடந்த விடயம் தவறு என்று மேயரும், ஆணையாளரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர்.
எனினும் மேயரோ, ஆணையாளரோ அது தொடர்பில் வருத்தம் தெரிவிக்காத காரணத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறினர். இதனால் கூட்டத்துக்கான நிறைவெண் இல்லாத காரணத்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ( மணிவண்ணன் அணியினர்) உறுப்பினர்களுடன் மட்டும் கூட்டத்தை நடத்த முடியாத நிலையில் மேயர் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
இது தொடர்பில் மேயர் வி.மணிவண்ணனிடம் கேட்டபோது, “கூட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றியவர்களுக்கு உரிய முறையில் வேதனம் வழங்கப்படும்” என்று பதிலளித்தார்.