10 அமைச்சுப் பதவிகள்: 14 பெயர்கள் பரிந்துரை – நியமனம் தாமதமாக இதுவே காரணம்.
10 அமைச்சுப் பதவிகளே வெற்றிடமாக உள்ள நிலையில் 14 பேருக்குப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே அமைச்சரவை நியமனம் தாமதமாகி வருகின்றது என்று அரச தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
வெற்றிடமாகவுள்ள 10 அமைச்சுப் பதவிகளுக்குப் பெரும்பான்மையை கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதில் இருவரை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி இணங்கவில்லை என்று அறியவருகின்றது.
இதேசமயம், அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளைச் சேர்ந்த துமிந்த திஸநாயக்க, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
10 அமைச்சுப் பதவிகளே வெற்றிடமாக இருக்கும் நிலையில் 14 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையால் நியமனங்கள் தொடர்ந்து தாமதமாகி வருகின்றன என்று கூறப்படுகின்றது.
இதனிடையே, ஜனாதிபதி அமைச்சராக நியமிக்க இணக்கம் காட்டாத இருவரின் பெயர்ப்பட்டியலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாமல் ராஜபக்சவின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.