வவுனியா வைத்தியசாலையில் சிசு மரணம் தொடர்பில் தீவிர விசாரணை!

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகைப் பிரிவினர் மூன்று தினங்கள் தங்கி நின்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவர் அங்கு பிரசவித்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களின் பின் மரணமடைந்திருந்தது.
இந்த மரணத்துக்கு வைத்தியசாலையின் தவறே காரணம் எனத் தெரிவித்து பாதிக்கப்பட்ட தாயார் முறைப்பாடுகளைத் செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதார அமைச்சின் கீழான திடீர் முற்றுகைப் பிரிவினர் மூன்று தினங்கள் தங்கியிருந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அது தொடர்பான பதிவுகள், ஆவணங்களையும் சோதனை செய்திருந்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட தாயை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சுமார் 6 மணிநேரம் வாக்குமூலமும் பெற்றிருந்தனர்.
இந்தச் சோதனை நடவடிக்கையில் கொழும்பிலிருந்து வந்த திடீர் முற்றுகைப் பிரிவினர் வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள், வைத்தியர்கள், பாெதுமக்கள், பணியாளர்கள், தாதிய பரிபாலகரின் கையொப்பங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள், சிசு மரணமடைந்த போது கடமையில் இருந்தோர் விபரங்கள் என்பவற்றைப் பரிசோதித்துள்ளனர்.
இதேவேளை, தனது குழந்தையின் மரணத்துக்கு இவர்களது விசாரணை முடிவில் தீர்வு கிடைக்கும் எனத் தான் நம்புகின்றார் என்று பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்துள்ளார்.