நாடு மீண்டெழ நிரந்தர தேசிய கொள்கை அவசியம்! – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.
“நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசிய கொள்கை ஒன்றே அவசியம். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாகச் செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்.”
இவ்வாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நல்ல பொருளாதாரக் கொள்கையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ‘தேசிய சபை’யை ஒரு தளமாகக் கொண்டு தேசிய கொள்கைக் கட்டமைப்பு குறித்து கலந்துரையாட ஒன்றாக இணைவோம் என்றும் அறைகூவல் விடுத்தார்.
இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கிருமித் தொற்று நீக்கிய, திரவ மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று (10) கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
போட்டி மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரமொன்றை உருவாக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்கத் தாம் செயற்பட்டு வருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்,
“முதலில் இந்த நிறுவனத்தின் தலைவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எதிர்காலத்தை உன்னிப்பாகக் கவனித்தவர். எங்களுக்கு உள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அவருக்கு நல்ல புரிதல் இருந்தது.
எனவே, இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவதோடு மட்டுமன்றி சர்வதேச ரீதியில் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து எமது ஏற்றுமதித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு இளைஞராக ஆரம்பித்த இந்த வேலைத்திட்டத்தை அவர் வெற்றிகரமாக தொடர்ந்தும் முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்த இடத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் கடினமான காலப்பகுதியில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நமது வரவு – செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம். நமக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி நமது தேவைக்கே போதுமானதாக இல்லை.
அதனால் ஒவ்வொரு வருடமும் கடன் வாங்க வேண்டியுள்ளது. இப்போது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். நமது பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
நமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நாம் ஈட்ட வேண்டும். அந்நியச் செலாவணி பற்றாக்குறையுடனோ வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையுடனோ இருக்க முடியாது.
வரவு – செலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை வைத்திருப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறாயின் நமது வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
அதற்கு நாம் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் பொருட்கள், பயிரிடும் பயிர், வழங்கும் சேவைகளை அதிகரிக்க வேண்டும்.
மிகவும் போட்டித் தன்மை கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் ஒன்றே நமக்குத் தேவை.
இன்று மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். தொழில்களை இழந்துள்ளனர். சிலர் ஒருவேளை உணவின்றி பசியால் வாடுகின்றார்கள். இதற்கு நாம் நீண்டகாலத் தீர்வு காண வேண்டும்.
அந்தநிலைக்குத் திரும்பிச் சென்று தீர்வுகளைத் தேட முடியாது. அதனால்தான் இன்று மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதற்காகத்தான் கொள்கைகள் உருவாக்க வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் நான் பிரதமராகவும் இருந்த போதே இந்த நிறுவனத்துக்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்ன இருந்தார். நாங்கள் அனைவரும் இதை முன்னெடுத்துச் சென்றோம். இது நல்லாட்சியின் ஒரு பலனாகும். நாங்கள் அமைதியாக வேலை செய்தோம். பின்னர் அரசு மாறியது.
புதிய அரசு வந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்படவில்லை. பொதுவாக, ஓர் அரசு மாறினால், ஏற்கனவே இருந்த அரசு செய்த பணிகள் நிறுத்தப்படும். ஆனால், இது நிறுத்தப்படவில்லை. அதன் பின்னர் நான் ஜனாதிபதியாகி இன்று இதனைத் திறந்து வைக்கின்றேன்.
நாம் அனைவரும் ஒரே தேசிய கொள்கையில் இருந்து செயற்பட வேண்டும். நாம் ஒரு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும்.
அந்தத் தேசிய கொள்கையில் நாம் முன்னோக்கிச் சென்றால், நாம் ஒருபோதும் தோல்வியடைய மாட்டோம். நாம் அரசு அரசு கொள்கைகளை மாற்றினோம். அமைச்சர்கள் மாறும் போதும் கொள்கைகள் மாற்றப்பட்டன. இவ்வாறு செயற்பட்டு நாம் எவ்வாறு முன்னேற முடியும்?
எமக்கு ஒரு நல்ல பொருளாதாரக் கட்டமைப்பு இருக்க வேண்டும். ஒரு நல்ல சமூகக் கட்டமைப்பும் அரசியல் கட்டமைப்பும் இருக்க வேண்டும்.
நமது பொருளாதாரக் கட்டமைப்பானது, அரசியல் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்தே அமைகின்றது. நிலையான அரசியல் முறைமையொன்றை ஏற்படுத்த முடியாவிட்டால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் இன்று இங்கு இருக்கின்றன. எனவே, நாங்கள் ஒரு தேசிய கட்டமைப்பின்படி செயற்படுவோம் என்பதை இங்கு கூற விரும்புகின்றேன். அப்போது அரசு மாறினாலும் மாறாவிட்டாலும் பிரச்சினை இல்லை.
அதனால்தான் அனைவரும் பங்கேற்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பல குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். எதிர்காலத்தில் நமது தேசிய கொள்கைகள் குறித்து கலந்துரையாடவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் இதை ஒரு தளமாகப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றேன்.
இந்தத் திட்டத்தின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான புதிய வழி கிடைத்துள்ளது. 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது போன்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான கொள்கை தொடர்பில் உடன்பாட்டுக்கு வர முடியும் என்று நான் நம்புகிறேன். அதை நாம் நிறைவேற்றுவோம்” – என்றார்.
சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெலவும் உரையாற்றினார். யாடென் லெபோரடரீஸ் மருந்து உற்பத்தி நிறுவனத் தலைவர் சசிமால் திஸாநாயக்கவும் உரையாற்றினார்.
யாடென் நிறுவனத்தின் நினைவுப் புத்தகத்தில் ஜனாதிபதி, நினைவுக் குறிப்பையும் பதிவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பவித்ரா வன்னியாரச்சி, துமிந்த திஸாநாயக்க, மயந்த திஸாநாயக்க, சுஜித் சஞ்சய, ஹர்ஷன ராஜகருணா, நிமல் லன்சா, ஜே.சி அலவத்துவல, எரான் விக்ரமரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, யாடென் லெபோரட்டீஸ் மருந்து உற்பத்தி நிறுவனத் தலைவர் சஷிமால் திஸாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.