வடக்கு, கிழக்கில் அரச படைகளின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியிலும் போதைப்பொருள் நுழைந்தது எப்படி?
“வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாதுகாப்புத்துறையினராலும் பொலிஸாரினாலும் அவர்களது புலனாய்வுப் பிரிவினராலும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தடையின்றி இடம்பெறுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது.
இத்தகைய கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களால் அப்பாவி மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றது. இத்தகையோரின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமையாகும்.”
– இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
“வடக்கு மாகாணத்தில் மிக அதிகளவிலான உயிர்கொல்லிப் போதைப் பொருள்களை உட்கொள்வதன் காரணமாக பல இளைஞர்கள் அண்மைக் காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிர்கொல்லிப் போதைக்கு அடிமையானவர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாவைக் கொடுத்து அவற்றை வாங்க வேண்டியிருப்பதன் காரணமாக களவுகள், கொள்ளைகள், வழிப்பறிகள் போன்றவை இடம்பெறுவதுடன் வாள்வெட்டுக் கலாசாரங்களும் உருவாகி வருகின்றன.
இலங்கையில் போதைவஸ்துகள் தொடர்பான இறுக்கமான பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.
உயிர்கொல்லிப் போதைப்பொருளுடன் கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் என்னவிதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன போன்ற செய்திகள் எதுவும் மக்களை எட்டுவதில்லை.
ஊடகங்களும் தொடர்ச்சியாக இவற்றைக் கண்காணித்து எத்தகைய தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றபோது, இவ்வாறான விடயங்களில் ஈடுபடக்கூடாது என்ற அச்சவுணர்வு இளையோருக்கு வரலாம்.
மிகப்பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பொலிஸார், அதிரடிப்படையினர் என்ற பல பிரிவினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படைப்பிரிவினருக்கு உதவ தங்களுக்கான உளவுப்பிரிவுகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில், மிகப்பெருமளவிலான போதைவஸ்துகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பழக்கத்தில் இருப்பது எவ்வாறு என்ற கேள்வி உருவாகின்றது.
இது தொடர்பான தகவல்களை படையினருக்குக் கொடுக்க மக்கள் அஞ்சுவதாகவும் கேள்விப்படுகின்றோம்.
ஏனெனில், உடனடியாக யார் மூலம் தகவல் கிடைத்தது என்ற செய்திகள் சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடுவதாக அறிய முடிகிறது.
இவ்வாறான ஒரு மோசமான சூழலில் பெற்றோர் தங்களது குழந்தைகளைத் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் உட்படுத்தி, இந்த சமூகத்தில் அவர்களை நற்பிரஜையாகக் கொண்டுவர சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நாங்கள் சகலரும் ஒன்றிணைந்தாலே இளைஞர்கள், யுவதிகள், மாணவர்களைப் பாதிக்கும் இந்தக் கொடூரமான போதைவஸ்து அரக்கனை சமூகத்திலிருந்து அகற்ற முடியும்” – என்றுள்ளது.