சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனால், தனிப்படை போலீசார் 316 நபர்களிடம் விசாரணை நடத்தியது தொடர்பான ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். அதன்பிறகு இந்த ஆவணங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு வந்த சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு துறையினர் கோடநாடு கொலை,கொள்ளை தொடர்பான விசாரணை நகலை பெற்று சென்றனர். தனிப்படை போலீசார் நேற்று உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 316 பேரிடம் நடத்திய விசாரணை ஆவணங்கள் ஒப்படைத்த நிலையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு வந்த சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு துறையினர் நகலை பெற்று சென்றனர்.
சிபிசிஐடியை சேர்ந்த 3 ஏடி எஸ்பிக்கள், 3 டிஎஸ்பிகள், 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு படையினர் புதிதாக வழக்கு பதிவு செய்து தங்களது விசாரணையை விரைவில் தொடங்க உள்ளனர். மேலும் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவில் குன்னூர் டிஎஸ்பி சந்திர சேகர் இடம்பெற்றுள்ளார்.
இந்த படையினர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, கொடநாடு எஸ்டேட் கம்பியூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரும் கொடநாடு கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட கனகராஜின் வாகன விபத்து வழக்குகளையும் விசாரிக்க உள்ளனர்.